×

மருத்துவக் கல்லூரி கட்டிடங்கள் கட்டுவது, நெடுஞ்சாலை துறையில் முறைகேடு இபிஎஸ் மீதான 2 புகாரில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி: தமிழ்நாடு அரசு ஒப்புதல்

சென்னை: அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடங்கள் கட்டுவதில் முறைகேடு மற்றும் நெடுஞ்சாலை திட்டப் பணிகளை தனது உறவினர்களுக்கு ஒதுக்கியது என்ற 2 புகார்களில் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் 2017 முதல் 2021வரை தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருப்பூர், நீலகிரி என 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன.

இந்த 11 மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 மாணவர்கள் படிக்கும் வகையில் ரூ.4,080 கோடி செலவில் கட்டிடங்கள் கட்ட கடந்த அதிமுக ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி அமைக்கப்படவில்லை என்றும், மருத்துவக் கல்லூரிகள் கட்டுவதில் மிகப் பெரும் அளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. நாமக்கல் நகரில் மருத்துவமனை கட்டிடம் பாதி கட்டியிருந்த நிலையில் இடிந்து விழுந்தது. இதனால், அப்போது பொதுப்பணித்துறையை கவனித்து வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்டோர் இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது.

இதற்கான ஆதாரங்களை திரட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை எடப்பாடி பழனிசாமி மீது விசாரணை நடத்த அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. அவர் எதிர்க்கட்சி தலைவராகவும், எம்எல்ஏவாகவும் உள்ளதால், இதுகுறித்து மேல் விசாரணை செய்ய அனுமதி அளிக்குமாறு தமிழ்நாடு அரசிடம் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதேபோல,நெடுஞ்சாலைத்துறையையும் எடப்பாடி பழனிசாமி கவனித்து வந்தார். அப்போது பல நெடுஞ்சாலைப் பணிகளை தனது உறவினரான ஈரோடு ராமலிங்கம் என்பவருக்கு ஒதுக்கியதாகவும் புகார் எழுந்தது.

இது குறித்து விசாரணை நடத்தும்படி அப்போது திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி, லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். ஆனால் எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் பின்னர் உச்சநீதிமன்றம் வரை வழக்குத் தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் புகாரின் மீது உண்மை இருப்பது தெரியவந்ததால், எடப்பாடி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீதான முறைகேடு புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க தமிழ்நாடு அரசின் அனுமதி கேட்டு லஞ்ச ஒழிப்புத்துறை கடிதம் எழுதியது.

இந்நிலையில் பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் அனுமதி வழங்கி தற்போது அரசாணை பிறப்பித்துள்ளார். அதைத்தொடர்ந்து 2 புகார்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கப்படலாம் என்றும் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களை ஆராய்ந்து அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எடப்பாடி பழனிசாமி மீது மட்டுமல்லாமல் ஒப்பந்ததாரர்கள், அரசு பொறியாளர்கள் உள்ளிட்டோர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த இருக்கிறது.

The post மருத்துவக் கல்லூரி கட்டிடங்கள் கட்டுவது, நெடுஞ்சாலை துறையில் முறைகேடு இபிஎஸ் மீதான 2 புகாரில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி: தமிழ்நாடு அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : EPS ,Government of Tamil Nadu ,Chennai ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் தடையை...